பிரான்ஸில் இடதுசாரிகள் வெற்றி ; ஆனாலும் அரசியல் முட்டுக்கட்டை நிலை
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றுள்ள போதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை தொடர்ந்து அங்கு அரசியல் முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி கூட்டணிக்கு 182 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
அதோடு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சிக்கு 163 ஆசனங்கள் கிடைத்துள்ள அதேவேளை இம்முறை அதிகாரத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல்லிற்கு 143 ஆசனங்களே கிடைத்துள்ளன.
முதல் சுற்று தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.எனினும் அவர்கள் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அச்சம் காரணமாக இடம்பெற்ற மூலோபாயரீதியிலான வாக்களிப்பின் காரணமாக அவர்கள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இடதுசாரிகள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள போதிலும் அவர்களிற்கு பெரும்பான்மை கிடைக்காததன் காரணமாக பிரான்ஸ் தனது எதிர்கால அரசாங்கம் தொடர்பில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கின்றது.
இதேவேளை இடதுசாரிகளின் வெற்றியை அதன் ஆதரவாளர்கள் கொண்டாடிவரும் அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் வெளியிட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.