கனடாவின் க்யூபெக் மாகாண முதல்வர் பதவி விலகல்
கனடாவின் க்யூபெக் மாகாண முதல்வர் ஃப்ரான்சுவா லெகோ, புதன்கிழமை காலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அக்டோபர் மாதத்தில் மாகாணத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எனது கட்சிக்கும் க்யூபெக்கிற்கும் நன்மை செய்யும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று லெகோ தெரிவித்தார்.
வாக்காளர்கள் மாற்றத்திற்கான விருப்பத்தை மட்டுமல்லாது, பொருளாதாரம் மற்றும் பிரெஞ்சு மொழி போன்ற “முக்கிய பிரச்சினைகளை” அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பல க்யூபெக் மக்கள் புதிய முதல்வரை விரும்புகிறார்கள் என்பதை நான் அறிகிறேன்,” என்றும் லெகோ தெரிவித்தார்.
கட்சி புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வரை, அவர் இடைக்காலமாக முதல்வர் பதவியில் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் லெகோ தலைமையிலான சீ.ஏ.க்யூ (Coalition Avenir Québec) கட்சி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில் அந்தக் கட்சி அனைத்து இடங்களையும் இழக்கக்கூடும் என்ற கணிப்புகளும் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக, மாகாணத்தில் மருத்துவர்களின் சம்பள முறையை மாற்றும் சட்டம் தொடர்பாகவும், கார் காப்பீட்டு வாரியத்தின் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள டிஜிட்டல் மாற்றத் திட்டம் தொடர்பான சர்ச்சையாலும் சீ.ஏ.க்யூ கட்சி கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.