லெகோ பாணியில் உருவாகும் போர் காட்சிகள் ; சமூக ஊடகங்களில் அதிர்ச்சி பரப்புரை
அமெரிக்கா - ஈரான் போரை மையமாகக் கொண்டு, லெகோ சினிமா பாணியில் உருவாக்கப்படும் AI (செயற்கை நுண்ணறிவு) காணொளிகள் சமூக வலைதளங்களில் பல மில்லியன் கணக்கான மக்களால் பகிரப்பட்டு வருகின்றன.
பார்ப்பதற்குச் சிறுவர்களுக்கான அனிமேஷன் போலத் தெரிந்தாலும், இவற்றில் கொல்லப்பட்ட குழந்தைகள், போர் வானூர்திகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பிரசார நெடி வீசும் உள்ளடக்கங்கள் நிறைந்துள்ளன.

இதனைத் தயாரிக்கும் 'எக்ஸ்ப்ளோசிவ் மீடியா' நிறுவனத்தின் பிரதிநிதி 'மிஸ்டர் எக்ஸ்ப்ளோசிவ்', தமக்கு ஈரான் அரசாங்கம் ஒரு முக்கிய 'வாடிக்கையாளர்' என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் காணொளிகள் அமெரிக்காவைப் பெரும் ஒடுக்குமுறையாளராகவும், ஈரான் அதற்கு எதிராகப் போராடும் சக்தியாகவும் சித்தரிக்கின்றன.
எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files), ஜார்ஜ் ஃபுளாய்ட் விவகாரம் போன்ற அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளை மையப்படுத்தி, மேற்கத்திய நாடுகளின் தரவுகளைக் கொண்டே இந்த ஏஐ காணொளிகள் உருவாக்கப்படுகின்றன.
இதில் பல தகவல்கள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டாலும், சமூக வலைதளங்களின் மூலம் இவை மிக வேகமாகப் பரப்பப்படுகின்றன.
குறிப்பாக, காணாமல் போன அமெரிக்க வானூர்திப்படை வீரர் மீட்கப்பட்டதை மறுக்கும் இந்தக் காணொளிகள், அமெரிக்கா ஈரானின் யுரேனியத்தைத் திருட வந்ததாக மாற்றுக்கதைகளை (Narratives) உருவாக்கி வருவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.