பிரான்ஸை வாட்டும் வெப்பம்; ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்
பிரான்ஸ் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ள வனிலையில் பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.
பிரான்ஸின் பொது சுகாதார முகமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரம் பதிவான சாதனை வெப்ப அலையின் உச்சகட்டத்தின் போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

பிரான்ஸ் வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவான புதன்கிழமை அன்று, 1,200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்த இரண்டு நாட்களிலும் தலா 1,400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதார பிரான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெப்ப அலைக்கு முந்தைய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தினசரி உயிரிழப்பு விகிதம் சுமார் 900 முதல் 1,000 வரை மட்டுமே இருந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் பிரான்ஸில் குறைந்தது 1,000 மேலதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த முகமை முடிவு செய்துள்ளது.
இருப்பினும், வீடுகளில் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளிட்ட மேலதிக தரவுகள் சேகரிக்கப்படும்போது, இந்த உயிரிழப்பு மதிப்பீடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த முகமை எச்சரித்துள்ளது.