அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ; குவைத், பஹ்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ஈரான்
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க நலன்கள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், அமைதி பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கத்தாரைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனத்திற்காக கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானின் இராணுவ உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தைத் தணித்து, நிரந்தரத் தீர்வை எட்டுவதற்காக 60 நாள் இடைக்கால பேச்சுவார்த்தை ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த நிலையில், அந்த ஒப்பந்தம் முற்றாக பாதிக்கப்படக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5ஆவது படைப்பிரிவு தலைமையகத்தையும், குவைத்தில் உள்ள அல் அசாத் விமானப்படைத் தளத்தையும் இலக்காகக் கொண்டு டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், "போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால், நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறுத்தப்படும் என்பதை எதிரித் தரப்பு உணர வேண்டும்" என ஈரான் பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.