இத்தாலியில் இந்திய நடிகையால் பறிபோன உயிர்கள்
இத்தாலியில் ஹிந்தி பட நடிகை காயத்ரி ஜோஷியின் கார் மோதியதில் வயதான தம்பதி பலியாகியுள்ளனர்.
கடந்த 2004ல் வெளியான ஸ்வதேஸ் ஹிந்தி படத்தில் நடிகர் ஷாரூக் கான் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜோஷி, 46. ஒரே படத்துடன் சினிமா துறையில் இருந்து விலகிய அவர், கடந்த 2005ல் தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆடம்பர கார்களின் அணிவகுப்பு
ஐரோப்பிய நாடான இத்தாலியில் காயத்ரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இங்குள்ள சர்தினியா தீவில் 'கார் டூர்' எனப்படும் ஆடம்பர கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், கணவர் விகாசுடன் காயத்ரி பங்கேற்ற நிலையில் சாலையின் ஒருபுறத்தில், அவரின் 'லம்போர்கினி' கார் உட்பட ஏராளமான கார்கள் ஒன்றை ஒன்று முந்தி சென்றன.
அப்போது, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வயதான தம்பதி ஓட்டி வந்த 'பெராரி' கார், காயத்ரியின் காரை முந்திச் செல்ல முயன்றது.
இதன்போது, இரண்டு கார்களும், அருகில் சென்ற 'டேம்பர் வேன்' எனப்படும், குடும்பத்தினருடன் பயணிக்கும் சொகுசு வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில், மூன்று வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில், பெராரி காரில் பயணித்த மெலிசா கிரவுட்லி, 63 மற்றும் மார்கஸ் கிரவுட்லி, 67 ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.