நெதர்லாந்தில் நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் புகுந்த லாரி! பலர் உயிரிழப்பு
நெதர்லாந்தில் பொது இடத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் லாரி புகுந்ததில் பலர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சமூக நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில், திரளான மக்கள் வேற்றுமையின்றி ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபடுவது உண்டு.
இதனை தொடர்ந்து, தெருவெங்கும் விழா கோலம் பூண்டு காணப்படும். பலூன்களை பறக்க விட்டும், தோரணங்களை கட்டி தொங்க விட்டபடியும், மக்கள் பேரணியாக நடந்தும், கார் உள்ளிட்ட வாகனங்களிலும் செல்வார்கள்.
சில சமயம் இதுபோன்ற தெருவில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக உள்ளூர் விடுமுறையும் விடுவதுண்டு. இதேபோன்றதொரு நிகழ்ச்சி நெதர்லாந்தின் தெற்கு பகுதியில் நியூ பெய்ஜர்லேண்ட் நகரில் நடந்தது. இதில், மக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ரோட்டர்டேம் பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்த அந்த பகுதியில் திடீரென வேகமுடன் வந்த லாரி ஒன்று கூட்டத்தில் புகுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.
குறைந்தது 3 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. பலர் காயமடைந்து உள்ளனர். ஸ்பெயின் நாட்டு போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் பெரிய வகை சரக்கு ஏற்றி செல்ல கூடிய லாரி விபத்து ஏற்படுத்தியுள்ளது.
லாரியை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.