உரிமைகோராத வெற்றியாளரைத் தீவிரமாகத் தேடும் லொட்டரி நிறுவனம்
இங்கிலாந்தின் பெக்ஸ்லி (Bexley) பகுதியில் அதிர்ஷ்டலாப சீட்டு வாங்கிய ஒருவருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை ரூபாயில் சுமார் 380 கோடி) மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.
ஆனால், இரண்டு மாதங்களாகியும் வெற்றியாளர் யார் என்பது தெரியாததால் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு விடுத்துள்ளது.
இங்கிலாந்தின் பெக்ஸ்லி பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அதிர்ஷ்டலாப சீட்டு ஒன்றிற்கே இந்த 10 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது.

பொதுவாக அதிர்ஷ்டலாப சீட்டு குலுக்கல் முடிந்து சில நாட்களிலேயே வெற்றியாளர்கள் தமது பணத்தைக் கோருவது வழக்கம்.
ஆனால், இந்த வெற்றியாளர் இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் முன்வரவில்லை. பரிசுத் தொகையை உரிமை கோருவதற்கு அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு நிறுவனம் 180 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்குள் வெற்றியாளர் தனது சீட்டைக் கொண்டு வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை ஏப்ரல் 2ஆம் திகதிக்குள் எவரும் உரிமை கோரவில்லை எனில், அந்தப் பரிசுத் தொகை முழுவதும் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு நிறுவனத்தின் தொண்டுப் பணிகளுக்காக (Good Causes) மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெக்ஸ்லி பகுதியில் அதிர்ஷ்டலாப சீட்டு வாங்கியவர்கள் தமது சீட்டுகளை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கோடிக்கணக்கான பணம் கைவிட்டுப் போகும் அபாயம் உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.