வெனிசுவேலாவடன் அமெரிக்கா போர் செய்யவில்லை ; அமெரிக்க தூதர்
வெனிசுவேலாவோ அல்லது அதன் மக்களோடு அமெரிக்கா போர் நடத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் தூதர் மைக் வால்ட்ஸ் (Mike Waltz) வலியுறுத்தியுள்ளார்.
வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நடவடிக்கை ஒரு போர் நடவடிக்கை அல்ல, மாறாக அது சட்டபூர்வ குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட சட்ட அமலாக்க நடவடிக்கை என ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவோ அதன் மக்களோடு அமெரிக்கா போரில் இல்லை. அமெரிக்கா கைது செய்திருப்பது ஒரு போதைப்பொருள் கடத்தல்காரனை. அவர் தற்போது அமெரிக்காவில் விசாரணைக்கு நிறுத்தப்படவுள்ளார்,” என மைக் வால்ட்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்க மக்கள்மீது தாக்குதல்களுக்கு பொறுப்பானவர், மேற்குக் கோளத்தின் (Western Hemisphere) நிலைத்தன்மையை குலைத்தவர், வெனிசுவேலா மக்களை சட்டவிரோதமாக அடக்கி ஒடுக்கியவர் எனவும் மைக் வால்ட்ஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மதுரோவின் நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்புக்கும், சர்வதேச ஒழுங்குக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அதனை எதிர்கொள்ளவே அமெரிக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், வெனிசுவேலா தொடர்பான நிலைமை மேலும் தீவிரமடையும் சாத்தியம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.