அமெரிக்காவில் கைதியுடன் மாயமான சிறை அதிகாரி! துப்புக்கொடுப்போருக்கு 10,000 டொலர் பரிசு
அமெரிக்கா சிறைச்சாலையொன்றிலிருந்து மாயமான ஆண் கைதி ஒருவரையும், சிறை அதிகாரியான பெண் ஒருவரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
அலபாமா மாநிலத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் கேசி வைட் (Casey White) எனும் கைதியும் சிறை அதிகாரியான விக்கி வைட் (Vicki White) என்பவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் இருவரின் பெயர்களுக்கும் இடையில் ஒற்றுமை உள்ள போதிலும் இருவரும் உறவினரகள் அல்லர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாயமான இருவரும் இறுதியாக கடந்த வெள்ளியன்று காலை காணப்பட்டனர்.
கைதியான கேசி வைட்டை (Casey White) மனநல பரிசோதனையொன்றுக்கு அழைத்துச் செல்வதாக சிறை அதிகாரி விக்கி வைட் (Vicki White), அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.
எனினும் , அப்பயணத்துக்கு உரிய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்பதை அதிகாரிகள் பின்னர் உணர்ந்தனர். இந்நிலையில் கைதி தப்பிச் செல்வதற்கு விக்கி வைட் (Vicki White) உதவினாரா அல்லது கைதியினால் அவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிவதற்கு அதிகாரிகள் புலனாய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கேசி வைட்டை (Casey White) கைது செய்வதற்கு அல்லது விக்கி வைட்டை (Vicki White) கைது செய்வதற்கு உதவுபவர்களுக்கு 10,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
