கனடா மற்றும் அமெரிக்க எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கும் கனடாவின் யூகான் பிரதேசத்துக்கும் இடையிலான தொலைதூர எல்லைப் பகுதியில் சனிக்கிழமை காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அலாஸ்காவின் ஜுனோ நகரிலிருந்து வடமேற்கே 370 கி.மீ. தொலைவிலும், கனடாவின் ஒய்ட்ஹார்ஸ் நகரிலிருந்து மேற்கே 250 கி.மீ. தொலைவிலும் இந்த நடுக்கத்தின் மையம் காணப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உடனடியாக சேதம் அல்லது உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடாவின் ஒய்ட்ஹார்ஸ் நகரில் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் பிரிவுக்கு நிலநடுக்கம் தொடர்பாக இரண்டு 911 அவசர அழைப்புகள் வந்ததாக சார்ஜெண்ட் கலிஸ்டா மக்லியோட் தெரிவித்துள்ளார்.
“மிகத் தெளிவாக உணரப்பட்டது. சமூக ஊடகங்களில் நிறைய பேர் அதைப் பதிவு செய்திருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்க மையத்துக்கு மிக அருகிலுள்ள கனடிய கிராமம் ஹெய்ன்ஸ் ஜங்ஷன் – தொலைவு சுமார் 130 கி.மீ. மட்டுமே. அங்கு 2022-ஆம் ஆண்டு மக்கள் தொகை 1,018 பேர் மட்டுமே. அலாஸ்கா பக்கம் மையத்துக்கு அருகிலுள்ள யாகுடாட் நகரில் மக்கள் தொகை 662 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.