பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் அரிய வகை மலேரியா பாதிப்பு ; இரு ஊழியர்கள் பலி; தீவிர விசாரணை!
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள அரிய வகை மலேரியா பாதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் பணியாற்றிய ஆறு ஆண் ஊழியர்களுக்கு “மலேரியா டிராபிகா” எனப்படும் தீவிரமான மலேரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற நான்கு பேரும் தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் மூலம் கொசுக்கள் ஜெர்மனிக்குள் வந்திருக்கலாம்
பாதிக்கப்பட்ட எந்த ஊழியரும் சமீபத்தில் மலேரியா அதிகமாக காணப்படும் நாடுகளுக்கு பயணம் செய்யவில்லை. இதனால் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட கொசுக்கள் ஜெர்மனிக்குள் வந்திருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விமானத்தில் வந்த கொசுக்கள் விமான நிலைய ஊழியர்களை கடித்ததன் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற சம்பவம் “Airport Malaria” என அழைக்கப்படுகிறது.
ஜெர்மனியில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளூரிலேயே மலேரியா பரவுவது மிகவும் அரிதானதாக உள்ளது. எனவே பயண வரலாறு இல்லாதவர்களுக்கு மலேரியா இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் உடனடியாக சந்தேகிக்காமல் போகும் அபாயம் உள்ளது.
இதனால் நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்பட்டு, தீவிர பாதிப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என ராபர்ட் கோச் நிறுவனம் எச்சரித்துள்ளது.
பிராங்க்பர்ட் விமான நிலையத்தைச் சுற்றிலும் தற்போது கொசுப் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிபடும் கொசுக்கள் பெல்ஜியத்தில் உள்ள வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு மரபணு பரிசோதனை செய்யப்பட உள்ளன.