ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகளை திருப்பி அனுப்பிய மலேசியா
மியன்மாரை சேர்ந்த 300 குடியேற்றவாசிகளுடன் மலேசியாவிற்குள் நுழைய முயன்ற இரண்டு படகுகளை அந்த நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
போதிய உணவு குடிநீர் இன்றி களைப்படைந்த நிலையில் காணப்பட்ட 300க்கும் மேற்பட்ட மியன்மார் குடியேற்றவாசிகளை மலேசியகரையோர காவல் படையினரின் படகுகள் எல்லைக்கு வெளியே பாதுகாப்பாக அழைத்து சென்றன என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் லாங்கவி தீவிலிருந்து இரண்டு கடல்மைல் தொலைவில் காணப்பட்ட இந்த படகிலிருந்தவர்களின் நிலையை அவதானித்த மலேசிய அதிகாரிகள் அவர்களிற்கு குடிநீரையும் உணவையும் வழங்கியுள்ளனர்.
படகுகளின் பயணம் குறித்த விபரங்களை பெறுவதற்காக தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய கரையோர காவல்படையினர் படகிலிருந்தவர்கள் ரோகியங்கா குடியேற்றவாசிகளா என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை வெள்ளிக்கிழமை மலேசியாவின் லாங்கவியில் கரையிறங்கிய 196 மியன்மார் குடியேற்றவாசிகளை மலேசிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்களில் 71 சிறுவர்கள் உள்ளதாகவும் இவர்கள் ரோகிங்யாக்கள் என கருதுவதாகவும் மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.