மாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை ; கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாடியோ கமாரா உயிரிழந்துள்ளார்.
மாலியில் பல ஆண்டுகளாகத் தனி நாடு கோரிப் போராடி வரும் தௌரேக் கிளர்ச்சியாளர்களும், அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகளும் முதல்முறையாக ஒருங்கிணைந்து தாக்குதல்கள் நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு ராணுவ முகாம்கள் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தலைநகர் பமாகோ அருகே காட்டி பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்தை குறிவைத்து தற்கொலைப்படையினர் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற போது அமைச்சர் எதிர்தாக்குதலில் ஈடுபட்டு சில பயங்கரவாதிகளை வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
எனினும், தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, வடக்கு மாலியின் முக்கிய நகரமான கிடால் நகரத்தையும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த தாக்குதல்களின் பின்னணியில் மாலி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ரஷியாவின் ‘ஆப்பிரிக்கா கார்ப்ஸ்’ படையினரும் பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மாலியில் நிலவும் இந்த புதிய சூழ்நிலை, நாட்டின் பாதுகாப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.