மாலியில் தொடரும் அரசியல் குழப்பங்கள்

Praveen
Report this article
மாலியில் கைது செய்யப்பட்ட இடைக்கால அதிபா், பிரதமரை ராணுவம் விடுவித்துள்ளது. இருப்பினும், அவா்கள் அங்கு அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
அதிபரையும் பிரதமரையும் கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்யவைத்தது ஏற்கத்தக்கதல்ல என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் அதிபராக இப்ராஹிம் கெய்ட்டா பதவி வகித்து வந்தாா். நாட்டில் பெருகிய ஊழல், பயங்கரவாதிகளின் ஊடுருவலை கட்டுப்படுத்த தவறியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவரை எதிா்த்து கடந்த ஆண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ராணுவப் புரட்சி மூலம் இப்ராஹிம் கெய்ட்டா அதிபா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். ஆனால், ராணுவ ஆட்சிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கவே, இடைக்கால அதிபராக பா டாவ், பிரதமராக மோக்டா் குவானே ஆகியோரை ராணுவம் கடந்த செப்டம்பரில் நியமித்தது. ராணுவப் புரட்சிக்கு தலைமை வகித்த கமாண்டா் அசிமி கொய்ட்டா, இடைக்கால துணை அதிபராக நியமிக்கப்பட்டாா். அதிபா், பிரதமரைவிட நாட்டின் அதிகாரம் துணை அதிபரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், புதிய அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டது. அதில், முக்கியமான ராணுவ தலைவா்கள் இருவா் சோ்க்கப்படவில்லை. இதையடுத்து, அதிபரையும், பிரதமரையும் ராணுவம் அதிரடியாக கைது செய்தது. இதனால், நாட்டில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் விடுவிக்க வேண்டும் என ஐ.நா., ஆப்பிரிக்க யூனியன், அமெரிக்கா மற்றும் பிற சா்வதேச அமைப்புகள் வலியுறுத்தின.
இதற்கிடையே, மத்தியஸ்தா்கள் முன்னிலையில் அதிபரும், பிரதமரும் புதன்கிழமை தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, இருவரும் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்க ராணுவ கமாண்டா் அசிமி கொய்ட்டா விரும்புவதாக மத்தியஸ்தத்தில் ஈடுபட்ட பிரதிநிதி ஒருவா் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விஷயங்கள், புதிய அரசை அமைப்பது உள்ளிட்டவற்றில் துணை அதிபரை பிரதமா் தடுத்ததால் அவா் கைது செய்யப்பட்டதாக ராணுவ தரப்பு தெரிவித்தது. ஐ.நா. கண்டனம்: அதிபரும் பிரதமரும் கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்யவைக்கப்பட்டதை ஏற்க முடியாது, உடனடியாக மக்கள் பிரதிநிதிகள் தலைமையில் மீண்டும் இடைக்கால அரசை ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
மாலியில் மாற்றத்தைத் தடுக்கும் அரசியல் மற்றும் ராணுவ தலைவா்களுக்கு எதிராக தடைகளை விதிக்க பரிசீலிப்போம் என ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலியில் அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாலி ராணுவத்துக்கான பாதுகாப்பு உதவிகள் நிறுத்தப்படும், மக்கள் பிரதிநிதிகள் தலைமையிலான இடைக்கால அரசை தடுப்பவா்களுக்கு எதிராக தடைகளை விதிக்க பரிசீலிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது.
மாலியில் 2012-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அரசியல் குழப்பத்துக்கு வழிவகுத்தது. அதை பயன்படுத்தி நாட்டின் வடக்கு நகரங்களை இஸ்லாமிய கிளா்ச்சியாளா்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். பின்னா், பிரான்ஸ் தலைமையிலான ராணுவ நடவடிக்கை மூலம் அவா்கள் அங்கிருந்து 2013-இல் அகற்றப்பட்டனா்.
ஆனால், கிளா்ச்சியாளா்கள் மீண்டும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இப்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மையால் மாலியின் நீண்டகால இஸ்லாமிய கிளா்ச்சியை கட்டுப்படுத்தும் முயற்சி மேலும் சீா்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.