ஒஷாவாவில் இரட்டை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது
ஒன்ராறியோ மாகாணத்தின் டர்ஹாம் பகுதியில் உள்ள ஒஷாவாவில் இரவு இடம்பெற்ற இரட்டைத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, 19 வயதுடைய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம், ஜான் வீதி மேற்கு (John Street West) மற்றும் சிம்கோ வீதி தெற்கு (Simcoe Street South) பகுதியில் மாலை 7:10 மணியளவில் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவசரசிகிச்சை
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், 18 வயதுடைய இளைஞர் ஒருவரை அவரது தொடையில் துப்பாக்கி காயத்துடன் கண்டுபிடித்தனர். உடனடியாக அவர் டொராண்டோ அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலை உயிருக்கு ஆபத்தில்லாததாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு, ஒஷாவா பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றின் அவசரசிகிச்சை பிரிவில் கால் பகுதியில் துப்பாக்கி காயத்துடன் 16 வயதுடைய மற்றொரு இளைஞர் வந்திருந்ததை போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது.
“இந்த 16 வயதுடைய இளைஞரும் அதே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது,” என பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது நிலையும் உயிருக்கு ஆபத்தில்லாததாக கூறப்பட்டுள்ளது. சம்பவத்துக்குப் பின்னர் சந்தேகநபர் தப்பிச்சென்றிருந்தாலும், அருகாமையில் இருந்த கட்டிடமொன்றில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர் ஒஷாவா நகரைச் சேர்ந்த 19 வயதுடைய யோசெஃப் அகமத் (Yosef Ahmed) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.