வான்கூவர் ஸ்கைட்ரெயின் நிலையத்தில் ஆயுதங்களுடன் நடமாடிய நபர் கைது!
கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள ஸ்கைட்ரெயின் ரயில் நிலையத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் ஒருவர், பொலிஸாரால் மின் அதிர்ச்சித் துப்பாக்கி பயன்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் கிடைத்த தகவலையடுத்து, மெட்ரோ வான்கூவர் போக்குவரத்துப் பொலிஸாரின் உதவியுடன் கிங் எட்வர்ட் நிலையத்தில் குறித்த நபரை வான்கூவர் பொலிஸார் கண்டறிந்தனர்.
பொலிஸாரின் உத்தரவுகளுக்கு அந்நபர் கீழ்ப்படிய மறுத்ததையடுத்து, மின் அதிர்ச்சித் துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக வான்கூவர் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் குழுவொன்று அந்நபரைத் தரையில் படுக்குமாறு உத்தரவிடுவதும், பின்னர் மின் அதிர்ச்சித் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கத்தி ஒன்று, தடி மற்றும் போலித் துப்பாக்கி ஆகியவற்றைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நபருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப் பொலிஸார் பரிந்துரைத்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.