சரேவில் இரட்டைக் கொலை: ஆணும் பெண்ணும் பலி!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சரே நகரில் அமைந்துள்ள வோல்மார்ட் பல்பொருள் அங்காடியின் வாகனத் தரிப்பிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
88 அவென்யூ மற்றும் 124 வீதிக்கு அருகிலுள்ள வோல்மார்ட் வாகனத் தரிப்பிடத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணும் பெண்ணும் கிடப்பதாக சரே பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் முதலுதவிப் பணியாளர்களும் இருவருக்கும் உயிர் காக்கும் முதலுதவிகளை வழங்கி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற பகுதி திங்கட்கிழமை காலை வரையும் பொலிஸாரின் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டு வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், ஒருங்கிணைந்த கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணையைப் பொறுப்பேற்றுள்ளனர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு இடம்பெற்று சுமார் 15 நிமிடங்களின் பின்னர், பிரின்சஸ் டிரைவ் 9700 ஆவது பகுதியில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த வாகனத் தீ வைப்புச் சம்பவத்திற்கும் இரட்டைக் கொலைக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அல்லது காணொளிகளை வைத்திருப்பவர்கள் 1-877-551-4448 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது ihitinfo@rcmp-grc.gc.ca என்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ கொலை விசாரணைப் பிரிவினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.