நோர்த் பே சூதாட்ட விடுதியில் வன்முறை 44 வயது நபர் கைது!
கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள நோர்த் பே பகுதியில் அமைந்துள்ள 'காஸ்கேட்ஸ் கேசினோ' சூதாட்ட விடுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, ஸ்டர்ஜன் ஃபால்ஸ் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைன்வுட் பார்க் டிரைவில் உள்ள அந்தச் சூதாட்ட விடுதிக்குள் இரண்டு ஆயுதங்களுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை 12:15 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"அந்த நபர் சூதாட்டப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதுடன், ஊழியர் ஒருவரைப் பலமுறை தாக்கியுள்ளார்.

மேலும், 'ஸ்லாட் மெஷின்' மற்றும் கணினி ஆகியவற்றை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திய அவர், ஊழியரிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளார்" என்று நோர்த் பே பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர் சூதாட்ட விடுதியை விட்டு வெளியேற முயன்றுள்ளார்.
ஆனால், அங்கு வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளைக் கண்டதும், மீண்டும் கட்டிடத்திற்குள் ஓடி, அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துத் தப்பிக்க முயன்றுள்ளார். எனினும், அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனையிட்டதில், அவரிடம் பித்தளை கைக்கவசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், திருடப்பட்ட கனேடியப் பணம் முழுவதும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் விசாரணைக்குப் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், அவர் தற்போது பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.