துப்பாக்கியுடன் பேருந்திற்குள் சென்ற நபர்.... அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்!
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனரோ நகரில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்திலிருந்து மினாஸ் ஜெரைஸ் நகருக்கு செல்வதற்காக பேருந்து ஒன்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
இதன்போது, கையில் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார்.
அந்த பேருந்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட பலர் இருந்துள்ளனர். இதன்போது குறித்த சந்தேக நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து பொலிஸார் பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்து பயணிகளை பிடித்து வைத்திருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 3 மணித்தியாலத்திற்குப் பிறகு அந்த நபர் பேருந்தில் இருந்த பயணிகளை விடுவித்து பொலிஸாரிடம் சரணடைந்தார். அவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
குறித்த சம்பவத்தில் பேருந்தில் சிக்கியிருந்த 17 பேரை பொலிஸார் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.