கனடாவில் இருவர் மீதான துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது
கனடாவின் அல்பர்டா மாகாணம், கிராண்டே பிரேரி அருகே சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 42 வயது நபருக்கு இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கிராண்டே பிரேரி கவுண்டியில் உள்ள ரேஞ்ச் ரோடு 35 மற்றும் டவுன்ஷிப் ரோடு 730 சந்திக்கும் கிராமப்புற சாலையில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, கிராண்டே பிரேரி கிராமப்புற காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு அவசர சேவைகள் சென்ற போது, இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். உயிரிழந்தவர்கள் 54 வயதான டேவிட் லகேஸ் மற்றும் 44 வயதான மிஷெல் லகேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆரம்ப விசாரணையில் சந்தேக நபர் ஒருவர் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அல்பர்டா குற்ற விசாரணைப் பிரிவு விசாரணையின் பொறுப்பை ஏற்றது. இதனையடுத்து, காலை 11.30 மணியளவில் வடமேற்கு அல்பர்டா முழுவதும் “ஆபத்தான நபர்” எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த எச்சரிக்கையில், சந்தேக நபர் ஆயுதம் தாங்கியவராகவும், ஏற்கனவே பலரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. அவர் கருப்பு நிற லாரி ஒன்றில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மதியம் 1 மணியளவில், மக்க்லென்னன் (McLennan), அல்பர்டா பகுதியில் சந்தேக நபரின் வாகனத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக முன்கூட்டியே தயார் நிலையில் இருந்த அவசர நடவடிக்கை குழு (Emergency Response Team) அங்கு அனுப்பப்பட்டு, சந்தேக நபர் பாதுகாப்பாக கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்தவர்களும் சந்தேக நபரும் ஒருவரையொருவர் அறிந்தவர்களே என காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 42 வயதான கர்டிஸ் பிலிப் ஹாலடே (Curtis Phillip Halladay) மீது இரண்டு இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.