வான்கூவாரை உலுக்கிய துப்பாக்கிச்சூடு
கனடாவின் வான்கூவாரில் காலை வேளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வான்கூவார் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொல்ப் கிளப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் கொல்ப் கிளப்பில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கனேடிய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் குறித்த நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸ் சார்ஜன்ட் திமோத்தி பியரொட்டி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் வேறு எவரும் காயமடைந்ததாக பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் ஏழு துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டதாகவும், ஆள் அடையாள விபரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் ஒரு வாகனம் தீப்பற்றிக் கொண்டதாகவும், மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துக்களுக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு உண்டா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.