கனடாவில் காய்ச்சல் பரவுகை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
கனடாவில் இந்த ஆண்டில் காய்ச்சல் பரவுகை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு கடுமையான இன்ஃப்ளூயன்சா (Influenza) பருவத்துக்குத் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்குக் காரணமாக, உலகளவில் பரவி வரும் மாற்றமடைந்த H3N2 வைரஸ் வகை, தற்போதைய தடுப்பூசியுடன் முழுமையாகப் பொருந்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சுமார் 2% பேருக்கு இன்ஃப்ளூயன்சா தொற்று உறுதியானது என கனடா பொது சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் சாதனை அளவிலான பரவலை சந்தித்துள்ளது.
இங்கிலாந்தில் வழக்கமானதைவிட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பருவகால காய்ச்சல் தொடங்கியுள்ளது; காய்ச்சல் நோயாளிகள் கடந்த ஆண்டைவிட மூன்றரை மடங்கு அதிகம் என்பதுடன், ஜப்பானிலும் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த அதிகரிப்புக்குக் காரணமாக புதிய மாற்றமடைந்த H3N2 வகை இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது வயது முதிர்ந்தவர்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகை “H3N2 கடந்த சில ஆண்டுகளாக மாறாமல் இருந்தாலும், தற்போது வடக்கு நாடுகளுக்குள் பரவியபோது குறிப்பிடத்தக்க மரபணு மாற்றங்களை வெளிப்படுத்துகிறது.
இதனால் தற்போது வழங்கப்படும் தடுப்பூசியுடன் இது பொருந்தாமல் இருக்க வாய்ப்பு உள்ளது,” என பிரிட்டிஷ் கொலம்பியா நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (BC CDC) தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டனுடா ஸ்கோவ்ரோன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
“H3N2 பருவங்கள் வழக்கமாக ‘மிக மோசமான காய்ச்சல் பருவங்களாக’ இருக்கும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்,” என டொராண்டோ சினாய் ஹெல்த் சிஸ்டம் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் அலிசன் மெக்ஜியர் தெரிவித்துள்ளார்.