சர்ரே நகரில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
சர்ரே நகரின் நியூட்டன் (Newton) பகுதியில் உள்ள 148-வது தெருவின் 6800-வது பிளாக்கில், மாலை 7 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சர்ரே காவல்துறையினர், வாகனத்திற்குள் துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

காயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவரது நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சில தொகுதிகள் (Blocks) தள்ளி, சுமார் 45 நிமிடங்கள் கழித்து ஒரு வாகனம் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அந்த வாகனம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களுடையதா? அல்லது இந்தச் சம்பவத்திற்கும் அந்த எரிக்கப்பட்ட வாகனத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
இதனால், ஒருங்கிணைந்த கொலை விசாரணைப் பிரிவு (IHIT) இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது சிசிடிவி (CCTV) காட்சிகள் வைத்திருப்பவர்கள் 1-877-551-IHIT (4448) என்ற எண்ணிலோ அல்லது ihitinfo@rcmp-grc.gc.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.