காதலியை கவர சிங்கத்திடம் சென்றவர் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் காதலியைக் கவர்வதற்காக சிங்கத்திற்கு அருகே இருக்கச் சென்று அது சோகத்தில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் லயன் தனியார் பூங்கா ஒன்று அமைந்துள்ளது.
3 சிங்கங்கள் அடைக்கப்பட்ட கூண்டுக்குள் நுழைந்து வீடியோ
இந்த பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அப்பூங்காவில் பணிபுரியும் 44 வயதான எஃப்.இரிஸ்குலோவ் என்பவர், தன் காதலியைக் கவர்வதற்காக 3 சிங்கங்கள் அடைக்கப்பட்ட கூண்டுக்குள் நுழைந்து வீடியோவும் எடுத்துள்ளார்.
அப்போது, சிங்கங்கள் இருக்கும் கூண்டின் கேட்டைத் திறந்து, ‘சிம்பா’ என அழைத்தபடி நுழைகிறார். பின்னர், அந்த நபர் சிங்கங்களுக்கு அருகாமையில் இருப்பது வீடியோவில் தெரிகிறது. தொடர்ந்து, ‘சிம்பா’ என்று அழைத்து அவற்றை அவர் கொஞ்சுகிறார்.
முதலில் ஆபத்தை உணராத அவர், அமைதியாகத் தோன்றினார். ஆனால் சிங்கங்களில் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது.
மற்ற சிங்கங்களும் அவரை சூழ்ந்து தாக்கத் தொடங்கியது பதிவாகி உள்ளது. இதில் பலத்த காயங்களால் அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.