தாயார் இறந்ததால் 50 ஆண்டுகள் குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் நபர்
பிரிட்டனில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வந்த குடியிருப்பில் இருந்து வெளியேற மறுத்ததை அடுத்து 53 வயது நபர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.
பிரிட்டனில் சமூக குடியிருப்பு ஒன்றில் தமது பெற்றோருடன் 1974ல் இருந்தே குடியிருந்து வருகிறார் ஸ்டீவ் ஒயிட். இவரது தாயார் ஜானட் என்பவரே வாடகைதாரராகும் பதிவு செய்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் கொரோனா தொடர்பான சிக்கலால் 81 வயதான ஜானட் மரணமடைய, குறித்த குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி ஸ்டீவ் ஒயிட்டுக்கு தகவல் அளித்துள்ளது டட்லி கவுன்சில் நிர்வாகம்.
மட்டுமின்றி, தாயார் வாடகைக்கு குடியிருந்த வீட்டை மகனுக்கு அல்லது மகளுக்கு சில சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கைமாறலாம் ஆனால் அந்த வகையிலும் ஸ்டீவ் தகுதி பெறவில்லை என கவுன்சில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, உள்ளூர் கவுன்சில் நிர்வாகி ஸ்டீவுக்கு ஆதரவாக போராடி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு மேல் ஒரே குடியிருப்பில் குடியிருக்கும் நபரை, அதே குடியிருப்பில் தொடர்வதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரமும் அவர் முயன்று வருகிறார்.
தாயார் இறந்த பின்னரும் தொடர்ந்து வாடகை செலுத்தி வருவதாகவும், கவுன்சில் நிர்வாகத்தின் முடிவு தம்மை மன உளைச்சலுக்கு இரையாக்கி உள்ளதாகவும் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.