நவீன உலகின் ஆதி மனிதன்
அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தைச் சேர்ந்த ராபின் கிரீன்ஃபீல்ட் (Robin Greenfield) என்ற நபர், நவீன வசதிகள் அனைத்தையும் துறந்து ஒரு முழு ஆண்டிற்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உண்டு வாழும் ஒரு விசித்திரமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
365 நாட்களும் காட்டில் கிடைக்கும் பழங்கள், பெர்ரிகள், இலை தழைகள் மற்றும் மீன்களை மட்டுமே உண்ணும் இவர், கார் மோதி உயிரிழந்த மான்களின் இறைச்சியையும் (Roadkill) உணவாகக் கொள்கிறார்.
"மற்றவர்கள் இதை விபத்தில் செத்த விலங்கு என்பார்கள், நான் இதை இயற்கையான இறைச்சி என்பேன்" எனக்கூறும் ராபின், சில நேரங்களில் ஆடுகளைப் போல மண்டியிட்டு நேரடியாகச் செடிகளிலிருந்தே வாயால் பறித்து உண்பதை ஒரு தனி சுகமாக உணர்கிறார்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு காலத்தில் கலிபோர்னியாவில் ஒரு பெரிய விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்த இவர், 2011-க்குப் பிறகு படிப்படியாகத் தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு இன்று அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, காப்பீடு, செல்போன் என எதையும் வைத்திருக்கவில்லை.
சுற்றுச்சூழல் ஆர்வலரான ராபின், அரசாங்க சட்டங்களை விட 'பூமியின் விதிமுறைகளை' (Earth Code) பின்பற்றுவதையே தனது கடமையாகக் கருதுகிறார். இதற்காகத் தனது உடைகளைத் தானே இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரித்துக் கொள்கிறார்.
இவர் பூங்காக்களில் உறங்குவதும், தடை செய்யப்பட்ட இடங்களில் உணவு தேடுவதும் சட்டப்படி தவறு என்றாலும், இயற்கையோடு இணந்து வாழ அந்த விதிகளை மீறுவதில் தவறில்லை என்பது இவரது வாதம்.
2.1 மில்லியனுக்கும் அதிகமான சமூக ஊடகப் பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள ராபின், தான் ஈட்டும் வருமானம் அனைத்தையும் தனது இலாப நோக்கற்ற அமைப்பிற்கே வழங்கிவிட்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் ஒரு எளிய மனிதனாக வாழ்ந்து வருகிறார்.
"எல்லோரும் என்னைப் போல மாற வேண்டும் என்பது என் விருப்பமல்ல; ஆனால் நாம் வாழும் இந்தப் பூமியைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சிறு மாற்றத்தையாவது செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம்" என்று கூறும் ராபின், மனித இனம் 99.9 சதவீத காலம் எப்படி வாழ்ந்ததோ, அந்த ஆதி வாழ்க்கை முறைக்கே தான் திரும்பியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.