கனடாவில் விசித்திரமான வழக்கு: அண்டை வீட்டு மரங்கள் மீது குற்றச்சாட்டு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அண்டை வீட்டு மரங்களால் தங்களுக்குப் பெரிய தொல்லை ஏற்படுவதாகக் கூறி, ஒரு தம்பதியினர் தொடர்ந்த விசித்திரமான வழக்கு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஜேன் மற்றும் வேய்ன் லீ என்ற தம்பதியினர், சுமார் 45 ஆண்டுகளாகத் தாங்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள ஆண்ட்ரூ மற்றும் கேத்தரின் தம்பதியினரின் வீட்டு மரங்களால் தங்கள் நிம்மதி கெடுவதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
அண்டை வீட்டின் தோட்டத்தில் உள்ள சுமார் 25 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்டமான ஆறு 'டக்ளஸ் பிர்' (Douglas fir) மரங்கள் மற்றும் ஒரு அகாசியா மரம் ஆகியவை தங்கள் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதாகவும், அவற்றிலிருந்து கொட்டும் இலைகள், குச்சிகள் மற்றும் பிசின் காரணமாகத் தங்கள் வீட்டின் கூரை மற்றும் பால்கனியை (Deck) வாரத்திற்கு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மரங்களிலிருந்து விழும் கழிவுகளால் தங்கள் பால்கனி சேதமடைந்துவிட்டதாகவும், அதைச் சரிசெய்ய எதிர்காலத்தில் செலவாகும் எனக்கருதி 4,500 டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், "மரங்களிலிருந்து எப்போது கிளைகள் விழுமோ என்ற பயத்தில் எங்களால் பால்கனியில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை, நண்பர்களின் செல்லப் பிராணிகளைக்கூடப் பராமரிக்க முடியவில்லை" என வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், 2020-இல் அந்த வீட்டிற்கு வந்த ஆண்ட்ரூ தம்பதியினரோ, அந்த மரங்களின் அழகைக் கண்டு வியந்தே தாங்கள் அந்த வீட்டை வாங்கியதாகவும், இலைகள் விழுவது இயற்கையான ஒன்றுதான் என்றும் வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சிவில் தீர்ப்பாய உறுப்பினர் டீனா ரிவர்ஸ், முதிய தம்பதியின் கோரிக்கையை அதிரடியாகத் தள்ளுபடி செய்தார்.
45 ஆண்டுகால வாழ்க்கையில் அந்த மரங்களால் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கிறதா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், நிபுணர்களின் ஆய்வின்படி அந்த மரங்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மரங்களுக்கு மிக அருகிலேயே பால்கனியை நீட்டித்துக் கட்டிவிட்டு, பிறகு இலைகள் விழுகின்றன என்று புகார் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், இலைகள் விழுவதைத் தடுக்க ஒரு குடையைப் பயன்படுத்தலாமே தவிர, அதற்காக மரங்களை வெட்டச் சொல்ல முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
மரங்கள் தரும் சிறு அசௌகரியங்களை 'பெரிய தொல்லை' (Nuisance) என்று சட்டப்பூர்வமாகக் கருத முடியாது என்பதே நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பாக அமைந்தது.