ஸ்கார்பரோவில் ஏற்பட்ட தீவிபத்தில் 80-வயதான மூதாட்டி பலி
டொராண்டோ — ஸ்கார்பரோவில் உள்ள ஒரு வீடு வியாழக்கிழமை மாலை தீக்கிரையாகியது. இந்த சம்பவத்தில் 80-வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
போர்ட்ஸ்மௌத் டிரைவ் மற்றும் லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் அருகே அமைந்த வீட்டில் தீப்பற்றிக் கொண்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
டொராண்டோ தீயணைப்பு துறையின் தகவலின்படி, அவர்கள் வருகை தந்த போதே வீட்டு பின் பகுதியிலிருந்து அதிக புகையும் தீயும் பரவியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியிலும் உள்ளே தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
வீட்டின் முகப்பு பகுதியின் தரைதளத்தில் இருந்து ஒருவர் மீட்கப்பட்டார், என்று சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். மீட்கப்பட்ட மூதாட்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
தீ விபத்தின் காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.