பிரிட்டனில் 3 சிறுமிகளை கொன்ற 18 வயது நபருக்கு 52 ஆண்டுகள் சிறை
பிரிட்டனில் 3 சிறுமிகளைக் கத்தியால் குத்திக் கொன்ற 18 வயது அக்ஸல் ரூடாகுபானாவுக்கு (Axel Rudakubana) 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் பிள்ளைகள் உட்பட மேலும் 10 பேர் காயமுற்றனர். இந்நிலையில் சந்தேக நபர் மீது கொலை, கொலை செய்யும் முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
அந்தக் கொடூரச் சம்பவம் நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் ரூடாகுபானாவின் பெற்றோர் உதவி நாடி 4 முறை காவல்துறையை அணுகினர்.
அதில் ஒருமுறை ரூடாகுபானா பேருந்தில் கத்தியை எடுத்துச் சென்றபோது காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து வைக்காமல் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடமிருந்து கத்திகளை மறைத்து வைக்கும்படி அதிகாரிகள் ரூடாகுபானாவின் அம்மாவிடம் கூறினர். அதேவேளை ரூடாகுபானா வயதில் உள்ளவர்களுக்கு 52 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை என்று நீதிபதி கூறினார்.
மேலும் அவர் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கமாட்டார் என்று நம்பினால் மட்டுமே நன்னடத்தையின் பேரில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்படக்கூடும் என்று நீதிபதி தெரிவித்தார்.