கனடாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்குச் சிறைத்தண்டனை!
அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்கு இடையே துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரையன் ஹேமில்டன்-ஹையட் என்பவருக்குக் கனடிய நீதிமன்றம் 6 ஆண்டுகள் மற்றும் 9 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
எல்லை தாண்டிய துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த லண்டன் பொலிஸார் மேற்கொண்ட புரெஜெக்ட் சேப் என்ற கூட்டுப் பொலிஸ் நடவடிக்கையின் கீழ் 2023 ஜூலையில் 41 வயதான பிரையன் கைது செய்யப்பட்டார்.
திட்டமிட்ட குற்றக் குழுவில் அங்கம் வகித்தமை, சட்டவிரோத துப்பாக்கிக் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புக்கொண்டார்.

அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்களின் கூட்டுப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அலிசா மிட்செல், இவருக்கு 6 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.
எளிதாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டது தீவிரமான குற்றமாகும் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே காவலில் கழித்த காலம் கணக்கிடப்பட்டதன் அடிப்படையில், இவர் மேலும் 2 ஆண்டுகள் வரை மட்டுமே சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். முன்னர் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத பிரையன், இச்சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தில் தனது ஆழந்த மனவருத்தத்தைத் தெரிவித்தார்.
இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவருக்கு ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நபருக்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.