கியூபெக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கைது கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், பல்வேறு காவல்துறை அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 மே 11 அன்று மொன்றியல் நகரில் செபாஸ்டியன் ஜிரூ (என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் மூவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அதில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், லீ வான் ஸ்மாத் ஜெர்மைன் என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். விசாரணையின் போது, குற்றச்சாட்டுக்குட்பட்ட நபருக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்புகள் இருப்பது மொன்றியல் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், புதன்கிழமை பர்னபி நகரிலுள்ள ஒரு வீட்டில் சோதனை உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, தேடப்பட்டு வந்த நபர் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வரை ஆறு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள விரைவில் கியூபெக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.