கனடாவில் கத்தி குத்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஓருவர் கைது
கனடாவின் ஓஷாவா நகரில் கத்தி குத்து கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர், பீட்டர்பரோ நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தற்போது அங்கு நடந்த மற்றொரு கொலை வழக்கிலும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார். பீட்டர்பரோ காவல்துறை, 44 வயதான மைக்கேல் வாட்டர்மேன் பிற்பகல் சுமார் 3 மணியளவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
டால்ஹௌசி மற்றும் ஆலிமர் வீதிகள் அருகிலுள்ள ஒரு வீட்டில் அவர் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாட்டர்மேனை வெளியே வருமாறு அழைத்தபோது, அவர் வீட்டை விட்டு வெளியே வந்து தானாகவே சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, டிசம்பர் 6ஆம் திகதி பீட்டர்பரோவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வாட்டர்மேனுக்கு எதிராக இரண்டாம் நிலை கொலை (Second-degree murder) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், செவ்வாய்க்கிழமை ஓஷாவாவில் நடந்த கத்தி குத்து கொலை சம்பவத்துடனும் வாட்டர்மேன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், பார்க் ரோடு சவுத் மற்றும் ஜான் ஸ்ட்ரீட் அருகே அதிகாலை 4.15 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது இந்த ஆண்டில் டர்ஹாம் பிராந்தியத்தில் பதிவான ஒன்பதாவது கொலை சம்பவமாகும்.