பிரேசில் பாலர் பாடசாலையில் பதற்றம் ; 13 குழந்தைகளைப் பிணைக்கைதிகளாகப் பிடித்த நபர் சுட்டுக்கொலை
பிரேசிலின் தெற்குப் பகுதியிலுள்ள குரிடிபா (Curitiba) நகரில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் 13 குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக பிடித்து, பாடசாலைக் கட்டிடத்திற்குத் தீ வைப்பதாக அச்சுறுத்திய நபர் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 09) குரிடிபா நகரின் சாவோ பிராஸ் (São Braz) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் பாடசாலையின் நுழைவாயிலைத் தாண்டிச் சென்று வகுப்பறை ஒன்றிற்குள் நுழைந்து, அங்கிருந்த 13 குழந்தைகளைப் பிணைக்கைதிகளாக பிடித்துள்ளார்.

அவர் அறையினுள் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தைத் தெளித்து, கையில் தீப்பெட்டி/லைட்டரை வைத்திருந்துள்ளார்.
அத்துடன், அவரிடம் கத்தி ஒன்றும், தொடக்கத்தில் துப்பாக்கி என சந்தேகிக்கப்பட்டு பின்னர் போலி துப்பாக்கி எனக் கண்டறியப்பட்ட பொருளும் இருந்துள்ளது.
காவல்துறை பேச்சுவார்த்தைக் குழுவினர் அந்த நபருடன் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அந்தத் தருணத்தில் குழந்தைகள் பீதியடைந்த நிலையில், அந்த நபர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளார்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் நோக்கில், பரானா மாநில காவல்துறை சிறப்புப் படையினர் உடனடி நடவடிக்கையில் இறங்கி தாக்குதல்தாரியைச் சுட்டு வீழ்த்தினர்.
இந்தச் சம்பவத்தில் ஒரு குழந்தை காயமடைந்துள்ள போதிலும், பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த 13 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உயிரிழந்த நபர் 'சிசோப்ரினியா' (Schizophrenia) என்ற மனநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக குரிடிபா மேயர் எடுவார்டோ பிமென்டெல் (Eduardo Pimentel) உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாடசாலை ஊழியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.