மொத்த கனேடியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்: சுகாதார அமைச்சர் கண்டிப்பு
கொரோனா பரவல் நாளும் உச்சம் கண்டுவரும் நிலையில், மாகாணங்களும் பிரதேசங்களும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கனடாவின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை செய்தி ஊடகம் வாயிலாக கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, கனடாவின் சுகாதார கட்டமைப்பு ஸ்தம்பிக்கும் நிலையில் உள்ளது என்றார்.
மக்கள் சோர்ந்து போயுள்ளனர். தற்போதைய கொரோனா பரவல் சூழலை கடப்பது மட்டுமின்றி, எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்தொற்றில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் அதற்கான ஒரேவழி தடுப்பூசி மட்டுமே என்றார் Jean-Yves Duclos.
தனிமனித இடைவெளி, சோதனைகள் தொடர்புடைய அனைத்தும் மிக முக்கியமான கருவிகள். ஆனால் இந்த நெருக்கடியில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் தடுப்பூசியால் மட்டுமே முடியும் என்றார்.
கியூபெக்கில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சரிபாதி சதவீதத்தினர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது மறுப்பாளர்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுகாதார கட்டமைப்பு ஸ்தம்பிக்கும் நிலையில் உள்ளது என்றார்.
இதனால் மாகாண அரசுகளும் பிரதேச நிர்வாகமும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயம் என்றார்.