பிறப்பில் மாறிய இரு குழந்தைகள்: 69 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு!
திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்த 'குழந்தைகள் மாற்றி வளர்க்கப்பட்ட' சுவாரஸ்யக் கதை, கனடாவில் இரண்டு மனிதர்களின் நிஜ வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது.
மருத்துவமனையில் தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்டு, 67 ஆண்டுகளுக்குப் பின்னர் உண்மையை அறிந்த இரு முதியவர்களுக்கு கனடா மாகாண அரசு தற்போது தலா 2,50,000 டொலர்கள் இழப்பீடு வழங்கியுள்ளது.
கனடாவின் மானிடோபா மாகாணத்தில் உள்ள ஆர்போர்க் நகரில், 1955-ஆம் ஆண்டு எட்வர்ட் ஆம்ப்ரோஸ் மற்றும் ரிச்சர்ட் போவைஸ் ஆகியோர் ஒரே நாளில் பிறந்தனர்.

பிறந்த சில தினங்களிலேயே மருத்துவமனை ஊழியர்களின் தவறால் இரு குழந்தைகளும் மாற்றி அனுப்பப்பட்டனர்.
ரிச்சர்ட், பூர்வீக மெட்டிஸ் (Métis) பழங்குடியினக் குடும்பத்தில் வளர்ந்தார். எட்வர்ட், உக்ரைனிய பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார்.
தங்களின் உண்மையான பெற்றோர் மற்றும் பாரம்பரியம் பற்றி ஏதும் தெரியாமலேயே இருவரும் வெவ்வேறு குடும்பங்களில் வளர்ந்து முதியவர்களானார்கள்.
கிட்டத்தட்ட 67 ஆண்டுகள் கழித்து, 2022-ஆம் ஆண்டு இவர்களது வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ரிச்சர்ட்டிற்கு அன்பளிப்பாகக் கிடைத்த வீட்டில் வைக்கும் 'டி.என்.ஏ Ancestry Kit' மூலம் சோதனை செய்தபோது, அவர் பூர்வீக மெட்டிஸ் இனத்தவர் அல்ல எனவும், உக்ரைனிய மற்றும் யூத பின்னணி கொண்டவர் எனவும் முடிவுகள் வந்தன.
அதே ஆண்டில் எட்வர்ட்டின் சகோதரியும் டி.என்.ஏ சோதனை செய்தபோது, பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனக்கு ஒரு சகோதரன் இருப்பது தெரியவந்தது. அவர்தான் ரிச்சர்ட் போவைஸ் என அடையாளம் காணப்பட்டார்.
இந்தச் சோதனைகளின் முடிவில்தான், 1955-இல் தங்களது வாழ்க்கை மாறிய விசித்திரக் கதை இருவருக்குமே தெரியவந்தது. இதன்பின், எட்வர்ட் 2024-இல் 'மானிடோபா மெட்டிஸ் அமைப்பில்' தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 1
955-இல் நடந்த இந்த மாபெரும் வரலாற்றுத் தவறுக்காக, 2024-ஆம் ஆண்டு மானிடோபா மாகாண முதல்வர் வப் கினியூ, சட்டசபையில் இவ்விருவரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.
தற்போது (2025-26 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி), அரசு அவர்களுக்குத் தலா 2,50,000 டொலர்களை இழப்பீடாக வழங்கியுள்ளது.