கனடாவில் தம்பதியினரின் மோசமான செயல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணம் முழுவதிலும் உள்ள நகைக்கடைகளைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தம்பதியினர், தங்களின் குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு வான்கூவர் நகரில் உள்ள நகைக்கடைகளில் அதிநவீன முறையில் கவனத்தைத் திசை திருப்பி திருடும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதை வான்கூவர் காவல் துறையின் சில்லறை வணிக குற்றத்தடுப்புப் பிரிவு கண்டறிந்து விசாரணையைத் தொடங்கியது.
எனினும், இந்த விசாரணை விரைவில் மாகாணத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், "2025 ஆகஸ்ட் முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில் இந்த தம்பதியினர் 12 தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் வெஸ்ட் வான்கூவர் முதல் ரெவெல்ஸ்டோக் வரையிலான பல சமூகங்களிலும், அத்துடன் கால்கரி நகரிலும் நடந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 90,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடம் கால்டரார் மற்றும் மரியா கால்டரார் ஆகிய இந்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் சில்லிவாக் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த தம்பதியினர் மீது வான்கூவர், நோர்த் வான்கூவர் மற்றும் வெஸ்ட் வான்கூவர் ஆகிய பகுதிகளில் செய்த குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 5,000 டொலருக்கும் குறைவான மதிப்புள்ள திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகளையும், 5,000 டொலருக்கும் அதிக மதிப்புள்ள திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மாகாணம் தழுவிய இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவளித்த நகை சில்லறை வணிக சமூகத்தினருக்கும், அனைத்துக் காவல்துறை அமைப்புகளுக்கும் வான்கூவர் காவல் துறை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.