கனடாவில் 90 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மர்மக் கொலை!
கனடாவின் தொராண்டோ நகரில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த இரண்டு பழைய மர்மக் கொலை வழக்குகளில் பலியான பெண்களின் அடையாளங்களை, நவீன மரபியல் தொழில்நுட்பமான ஐ.ஜீ.ஜீ. மூலம் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இதில் 90 ஆண்டுகளுக்கு முன்பு கணவரால் கொடூரமாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண் ஒருவரின் மர்மமும் அடங்கும்.
கடந்த 1995-ஆம் ஆண்டு, தொராண்டோவில் உள்ள 'டான்ஃபோர்த் மற்றும் காக்ஸ்வெல்' பகுதியில் பழைய கார் விற்பனையகக் கட்டடம் ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பூமிக்கு அடியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை அவதானித்தனர்.

மருத்துவப் பரிசோதனையில், அந்தப் பெண் சுத்தியல் போன்ற கனமான ஆயுதத்தால் மண்டையில் 6 முறை தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், பின்னர் திட்டமிட்டுப் புதைக்கப்பட்டதும் உறுதியானது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அந்த உடலின் அடையாளம் தெரியாமல் இருந்தது. மண்ணில் பல ஆண்டுகள் இருந்ததால் பாக்டீரியாக்களால் டி.என்.ஏ மாதிரிகளைப் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஆனால், அண்மையில் எலும்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பெறப்பட்ட தூய்மையான டி.என்.ஏ மூலம், இறந்தவர் மேரி மெக்லியோட் மாஃபாட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
1905-இல் ஸ்காட்லாந்தில் பிறந்த மேரி, 1913-இல் கனடாவிற்கு இடம்பெயர்ந்தார். மேரியின் கணவரான ஆண்ட்ரூ லாயிட் மாஃபாட் என்பவரே இக்கொலையைச் செய்துள்ளார்.
மேரிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை மணந்து தொராண்டோவில் வாழ்ந்து வந்த கணவரைத் தேடி மேரி வந்தபோது ஏற்பட்ட தகராறில், ஏப்ரல் 1936-இல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
கொலையாளி ஆண்ட்ரூ, தனது காரியகத்திற்கு அருகிலேயே மேரியைப் புதைத்துவிட்டு, 'டிரேக் லாயிட் கம்மிங்ஸ்' என்ற போலி பெயரில் அமெரிக்கா மற்றும் வான்கூவரில் தலைமறைவாக வாழ்ந்து, மொத்தம் 4 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு 1985-இல் உயிரிழந்தார்.
இதேவேளை, ஏப்ரல் 22, 2004 அன்று, நெடுஞ்சாலை 401-இல் ஒரு கார் வேண்டுமென்றே டிராக்டர்-டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காரின் பயணியர் இருக்கையில் எரிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காரை ஓட்டிவந்த சியுமி கில்ஃபு என்பவர், காரைக் கொளுத்தி ஆதாரங்களை அழிக்க முயன்றதற்காகவும், வாகனத்தை ஆபத்தாக இயக்கியதற்காகவும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று 2012-இல் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
ஆனால், இறந்த பெண் யார் என்பதை அவர் கடைசி வரை கூறவில்லை. தற்போது ஐ.ஜீ.ஜீ தொழில்நுட்பம் மூலம் அந்தப் பெண் மணிடோபாவைச் சேர்ந்த பேட்ஸி புளோரா லாகார்ட் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பழங்குடியினப் பின்னணியைக் கொண்டவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக விடை தெரியாமல் இருந்த இந்த இரண்டு வழக்குகளிலும், உயிரிழந்த பெண்களின் உண்மையான அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.