ஜப்பான் தீவுகளை விட்டு பெருமளவான மக்கள் வெளியேற்றம்
தென் ஜப்பானில் உள்ள தொலைதூர தீவுகளில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இன்று (07) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகளில் அண்மையில் சுமார் 1,580 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான அகுசேகி தீவில் பாரிய சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி முதல் இடைவிடாத நில அதிர்வுகள் அப்பகுதி மக்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்களில் பலர் தூக்கத்தை இழந்துள்ளனர்.
21 ஆம் திகதி முதல் இடைவிடாத நில அதிர்வுகள்
அகுசேகியில் வசிக்கும் 89 குடும்பங்களில் 44 குடும்பங்கள் பிராந்திய மையமான ககோஷிமாவிற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 15 குடும்பங்கள் அருகிலுள்ள மற்றொரு தீவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என உள்ளூர் மேயர் ஜெனிசிரோ குபோ தெரிவித்துள்ளார்.
ஏழு மக்கள் வசிக்கும் மற்றும் ஐந்து மக்கள் வசிக்காத தீவுகளுக்கு ககோஷிமாவிலிருந்து ஒரு படகில் பயணிப்பதாக இருந்தால் 11 மணிநேரம் செல்லும். இந்த பகுதியில் 21 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை 1,582 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
சமுத்திரத்திற்கு அடியில் எரிமலை வெடிப்பும், அதனால் வெளியேறும் மக்மா குழம்பின் வெளியேற்றும் தான் நில அதிர்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்த நில அதிர்வுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என அவர்களால் கணிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 346 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டபோது, இப்பகுதியில் இதேபோன்ற தீவிர நிலநடுக்க நடவடிக்கை ஏற்பட்டது என ஜப்பான் வளிமண்டலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நில அதிர்வுகள்
ஜப்பான், பசிபிக் "நெருப்பு வளையத்தின்" மேற்கு விளிம்பில் உள்ள நான்கு பெரிய டெக்டோனிக் தகடுகளின் மேல் அமைந்திருப்பதால் உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது.
சுமார் 125 மில்லியன் சனத்தொகையை கொண்ட ஜப்பானில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நில அதிர்வுகள் பதிவாகின்றன.
உலகின் ஏற்படும் நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதம் இங்கு ஏற்படுகிறது. பாரிய நிலநடுக்கம் விரைவில் ஏற்படும் என சமூக ஊடகங்களில் பரவு போலிச் செய்திகளால் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜப்பானுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டு மங்கா (Manga) என்கின்ற புத்தகத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி ஜப்பானில் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறப்பட்டிருந்தது ஆனால் அது நடக்கவில்லை.