வியட்நாம் பேருந்தில் பயங்கர தீ விபத்து ; 7 பேர் பலி
வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரை நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு பயணத்தைத் தொடங்கிய குறித்த பஸ்சில் மொத்தம் 24 பேர் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை டாங் நாய் நகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ வேகமாக பரவியதால், பயணிகள் உயிர் தப்புவதற்காக அவசரமாக வெளியேற முயன்றனர்.
இருப்பினும், தீயின் கொடூரத்தில் சிக்கிய 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேருந்து தீப்பற்றியதற்கான காரணம் குறித்து வியட்நாம் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.