சீனாவில் பாரிய மண்சரிவு; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று காலை திடீரென பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், அதன் கீழ் பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடிந்து நொறுங்கியுள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் விரைந்த 100 மீட்புக்குழுவினரும் 200 தீயணைப்பு வீரர்களும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த 9 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மேலும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மண்சரிவின்போது பாறைகளும் இடிபாடுகளும் வீதிகளில் வந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த மண்சரிவு ஏற்பட்டதற்கான உடனடி காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. வெளியாகியுள்ள சி.சி.டி.வி வான்வழிப் படக்காட்சிகளில், கட்டிடங்கள் மீது பாறைகள் விழுந்து நொறுங்குவதும், மக்கள் தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.