பிரான்ஸில் பெரும் காட்டுத்தீ; 525 பேர் அவசரமாக வெளியேற்றம்
பிரான்ஸின் லேண்டஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் காட்டுத்தீ காரணமாக 525 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அடர்ந்த பைன் காடுகளுக்குப் புகழ்பெற்ற லேண்டஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவி வந்துள்ளது. இதனால் காடுகள் வறண்டு, தீப்பற்றக்கூடிய அபாயகரமான நிலையில் காணப்பட்டன.
இந்நிலையில், லக்லான் கிராமத்திற்கு அருகிலுள்ள காடுகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
சுமார் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையுடன் பலத்த காற்றும் வீசியதால், தீ வேகமாகப் பரவி சுமார் 2,700 ஏக்கர் வனப்பகுதியை எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ தற்போது கிராமத்திற்கு மிக அருகில் சென்றுள்ளதால், உயிருக்கு அஞ்சிய 525 பேர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆறு விமானங்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.