இத்தாலியில் பயங்கர காட்டுத்தீ ; 24 பேர் படுகாயம்
இத்தாலியின் வெனடோ மாகாணத்தில் கார்டா ஏரி அருகே ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வெனடோ மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கார்டா ஏரியைச் சுற்றி பரந்த வனப்பகுதி காணப்படுகிறது. இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வனப்பகுதியில் முகாமிட்டு இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கார்டா ஏரி அருகே பெச்சிரா டெல் கார்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில் இன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வேகமாகப் பரவிய தீயில், அப்பகுதியில் முகாமிட்டிருந்த பலர் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தீயில் சிக்கி காயமடைந்த 24 பேரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.