நியூயார்க் மேயர் மம்தானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்
நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக நியூயார்க் நகரத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி மேயராகப் பதவி வகித்து வருகிறார்.

பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள மேயர் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோர் தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மேயர் மம்தானி வெளியிட்ட விடியோவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஒரு இனப்படுகொலை எனவும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு போர்க்குற்றவாளி அவர் கைது செய்யப்பட வேண்டுமெனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதால் தனக்கும் தனது மனைவிக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக, மம்தானி தெரிவித்துள்ளார்.