அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை தொற்று ; முக்கிய அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தட்டம்மை பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மாகாணமான டெக்ஸாஸில் கடந்த 5 நாள்களில் மட்டும் 20 பேருக்கு புதியதாகத் தட்டம்மை பாதிப்பு உண்டாகியுள்ளதாகவும், குறைந்தது 58 பேர் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாகாணத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் பரவல்
டெக்ஸாஸ் முழுவதும் 561 பேருக்கு இந்தப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தட்டம்மை நோயானது வேகமாகப் பரவும் திறன் கொண்டவை என்பதால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டு துவங்கியதிலிருந்து அமெரிக்காவின் 24 மாகாணங்களில் 712 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 97 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் அந்நாட்டின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
இத்துடன், இந்தத் தொற்றுநோய் பரவலானது தொடர்ந்தால், கடந்த 2000-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘தட்டம்மை ஒழிக்கப்பட்டது’ எனும் அங்கீகாரத்தை அமெரிக்கா இழக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, தட்டம்மை அல்லது மீஸல்ஸ் எனப்படும் இந்தத் தொற்று நோயானது ஒரு வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்பாகும். இது ஏற்கனவே பாதிக்கப்பட்டவருடனான நேரடி தொடர்பு மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு பரவக் கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நோயினால் அதிகம் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.