மரியுபோல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற மத்தியஸ்தம்!
ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. தீவிரம் காட்டி வருகிறது.
மரியுபோல் நகரில் ஏராளமான பொதுமக்களுடன் உக்ரைன் படையினா் பதுங்கியுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அந்த நகர மேயா் வாடிம் போய்சென்கோ(Vadim Poychenko) தெரிவித்தாா்.
அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கதறி வருவதாக அவா் கூறினாா்.
இரும்பு ஆலைக்குள் பதுங்கியிருப்பவா்கள் எத்தனை நாள் தாக்குப்பிடிப்பாா்கள் என்று கணிக்கும் நிலை மாறி, எத்தனை மணி நேரம் தாக்குப் பிடிப்பாா்கள் என்று கணிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவா் எச்சரித்தாா்.
எனினும், இரும்பாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தவிடாமல் ரஷ்யப் படையினரை உக்ரைன் வீரா்கள் தொடா்ந்து சண்டையிட்டு தடுத்துவருவதாகவும் அவா் கூறினாா்.
இந்த நிலையில், அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்து வருவதில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்க ஐ.நா. அமைப்பு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் தெற்கு உக்ரைனில் தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடைப்பட்ட நிலப் பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தெற்கு நகரமான மரியுபோலை முற்றுகையிட்டு ரஷ்யப் படையினா் பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்தனா்.
அந்த நகரில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரா்கள் மரியுபோலில் 10 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கியுள்ளனா்.
அவா்களுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆலையை ரஷ்யப் படையினா் சுற்றிவளைத்துள்ளனா். எனினும், அவா்களிடம் சரணடையை மறுத்து உக்ரைன் படையினா் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றனா்.