நடுக்கடலில் தத்தளித்த பயணம்; குடியேற்றவாசிகள் பலர் உயிரிழப்பு
மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகு நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பு இவர்களை காப்பாற்றியுள்ளன. லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின் மீட்கப்பட்டதாகவும் உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு குடிநீர் இன்மையால் உயிரிழந்தனர்
படகு பயணத்தை ஆரம்பித்து மூன்று நாட்களின் பின்னர் அதன் இயந்திரம் பழுதடைந்ததாகவும் இதனால் தாங்கள் நடுக்கடலில் தத்தளித்ததாகவும் உயிருடன் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளதாகவும், அவர்கள் கடலில் மூழ்கி இறக்கவில்லை உணவு குடிநீர் இன்மையால் உயிரிழந்தனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த படகினை தொலைக்காட்டிகளை வைத்து அவதானித்த அரசசார்பற்ற அமைப்பு இத்தாலிய கடலோர காவல்படையினருடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
உயிர்தப்பியவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர் என அரசசார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏனைய 23 பேரை தமது கப்பலில் வைத்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒருவாரகாலமாக கடலில் தத்தளித்ததால் படகில் இருந்தவர்கள் பெரும் துயரத்தில் சிக்குண்டனர் உணவும் குடிநீரும் விரைவில் தீர்ந்துவிட்டது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்ததாக எஸ்ஓஸ்எஸ் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.