அவுஸ்திரேலியா பராமரிப்பு நிலையத்தில் துஸ்பிரயோகம் ; 1200 சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு
அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சந்தேக நபரால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறுவர்களை தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்
ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 23 வரை மெல்பேர்னில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,குறிப்பிட்ட நபர் 2017 முதல் வேறு 17 சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றியுள்ளதால் அங்கும் துஸ்பிரயோகம் இடம்பெறலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அந்த நபரின் பராமரிப்பின் கீழ் இருந்தனரா என்பதை உறுதி செய்ய உதவுவதற்காகவே சந்தேகநபரின் பெயரை வெளியிட்டதாக விக்டோரியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு தங்கள் பிள்ளையை அனுப்பிய ஒவ்வொரு பெற்றோருக்கும் குறிப்பிட்ட நபர் அங்கு பணியாற்றினாரா என்பது தெரியவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.