லண்டன் இளைஞரின் உயிரைப் பறித்த பர்ரிட்டோ உணவு: அதிர்ச்சி சம்பவம்
மெக்சிகோவில் சுற்றுலா சென்ற லண்டன் இளைஞர் ஒருவர் பர்ரிட்டோ உணவு சாப்பிட்டு சடலமாக திரும்பிய சம்பவத்தில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் பிளேயா டெல் கார்மென் என்ற நகரத்திலேயே குறித்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்துள்ளது. நண்பர்கள் சிலருடன் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் 19 வயதேயான Joe Dobson.
இந்த நிலையில் லண்டனில் தங்களுக்கு பிடித்தமான உணவகம் ஒன்றை மெக்சிகோவிலும் காண நேர்ந்ததையடுத்து, அவர்கள் அங்கே உணவருந்த சென்றுள்ளனர். ஆனால் எள் கலந்த உணவு தமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்பதால், உணவில் சேர்க்க வேண்டாம் என Joe Dobson அந்த உணவக ஊழியரிடம் கூறியிருக்கிறார்.
இருப்பினும் அவருக்கு பரிமாறப்பட்ட பர்ரிட்டோ உணவில் எள் கலந்திருப்பதை சாப்பிட்டதும் அவர் கண்டறிந்துள்ளார். இதனையடுத்து, ஒவ்வாமையால் அவதிப்பட, அந்த ஹொட்டல் ஊழியர்களே தேன் கலந்த பானம் ஒன்றை அளித்துள்ளனர்.
மட்டுமின்றி, ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ளாமல் தாமதம் செய்துள்ளனர். எள் கலந்த உணவு தமது உயிருக்கே ஆபத்தாக முடியும் என கூறியும், அந்த உணவகத்தினர் அதை பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட Joe Dobson சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த வழக்கு தெற்கு லண்டனில் உள்ள உடற்கூராய்வாளர் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வாரம் விசாரணைக்கு வந்துள்ளது.