நேரலையில் சமூக ஊடகப் பிரபலம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு; சம்பவத்தால் ஷாக்
மெக்சிகோவில் தனது நண்பர்களுடன் டிக்டொக் நேரலையில் உரையாடிக்கொண்டிருந்த சமூக ஊடகப் பிரபலம் சீசர் காஸ்டெலம் (Cesar Gastelum) துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு நகரமான குலியாகானில் (Culiacan) உள்ள துரித உணவு விற்பனை நிலையம் ஒன்றுக்கு வெளியே செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நகைச்சுவை காணொளிகள் மூலம் டிக்டொக்கில் சுமார் 600,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட காஸ்டெலம், குறித்த உணவகத்துக்கு வெளியே தனது நண்பர்களுடன், நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது, உந்துருளிகளில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் அவர்களை நெருங்கியுள்ளனர்.
இதில் உந்துருளியை ஓட்டி வந்த நபர் ஒருவர் காஸ்டெலமை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது நேரலையில் பதிவாகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை சினாலோவா (Sinaloa) மாநில பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதுடன், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சினாலோவா மாநிலத்தின் தலைநகரான குலியாகானில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே கட்டுப்பாட்டைப் பிடிப்பதற்காக நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் மெக்சிகோவில் ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள அழகு நிலையமொன்றில் டிக்டொக் நேரலையில் இருந்தபோது, 23 வயதான அழகுக் கலை நிபுணர் வலேரியா மார்க்வெஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 'எல் ஆர்-1' (El R-1) என அழைக்கப்படும் ராமான் ஏஞ்சல் அல்வாரெஸ் அயாலா என்ற குற்றக் குழுத் தலைவனை மெக்சிகோ அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.